Posts mit dem Label புதிய விடுதலைப் போர் werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label புதிய விடுதலைப் போர் werden angezeigt. Alle Posts anzeigen

Sonntag, 5. April 2009

தமிழ் மக்களின் உரிமைப் போர் என்பது...

அன்பு வாசகர்களே,இக் கட்டுரையானது நாதன் எனும் ஆக்கதாரரால் ஆக்கப்பட்டது.

சமகால இலங்கை அரசியலில் வன்னி யுத்தம் பற்றிப் பேசுகிறது இக் கட்டுரை.
நாதன்,ஓரளவு நியாயமாகக் கருத்துக்களை முன்வைத்த முன்னைய கட்டுரைகளிலிருந்து இக்கட்டுரையை மேலும் விருத்திக்கிட்டுச் செல்பவராக இருப்பினும்,நாதனின் கருத்துக்கள் பேசும் சங்கதிகளைக் கடந்த பத்தாண்டுகளுக்கு முன் நமக்குள் உலாவிய"தமீழீழம்"பத்திரிகைவாயிலாக நாம் கடந்து வந்துள்ளோம்.

அப்பத்திரிகையானது முற்றிலும் புலிகளுக்கு முண்டுகொடுக்கும் தந்திரோபாயத்தைக் கடந்து எதையும் நாணயத்தோடு நம்மோடு பேசவில்லை!


கறாராகச் சொல்வதாக இருந்தால் அஃது,சேரன்,விக்கி,சரிநிகர் பாத்திரத்தை அன்று எடுத்துக்கொண்டு, நம்மை மோசஞ் செய்தது என்பதே சரியானது.

இப்போது நாதனிடம் வருவோம்.

கீழ்காணும் கட்டுரையூடாக நாதன் பேசும் அரசியலுக்கும் போராட்டப் பாதைக்கும்,செல்நெறிக்கும் கடந்துவந்த பாதையின்வழிப் புரியுமிடத்து பாரியவித்தியாசமில்லை.இது,இன்றைய ஆசிய அரசியல் பொருளியற் சூழலில், புலிகளின் பின்னே நிற்கும் போராளிகளை தேசபக்தர்களாக்குவதால் நமது விடுதலைக்கான இன்னொரு பாதை திறக்கும் போராட்டத்தை முன்வைப்பதாக இருக்கமுடியுமாவென வினவா வைக்கிறது.

தமீழீழம் பத்திரிகையானது எப்படிப் புலிகளது இராணுவ அமைப்பைத் தமிழீழ விடுதலை இராணுவமாகக் காயடித்து நம்மைக் குழப்பியதோ அதே பாணியில் நாதன் கருத்துக்கட்டுகிறாராவென எண்ணுவதை விட,அத்தகைய செல் நெறியுள் நாதன் உலா வருகிறார்.

கருத்துக்கள் பலவாறாக விவாதத்துக்குட்பட்டாகவேண்டும்.எனவே, கருத்துக்களுக்குச் சாவு மணி அடித்துவிட முடியாது.வெளிக்கொணர்ந்தே ஆகவேண்டும்!நாம் அனைத்தையும் இழந்து நாடோடிகளாகிவிட்டோம்.இங்கே,புரட்சியைக் காட்டிக்கொடுப்பதில் நாமே முன்னோடிகள்.அதில,; நமது பாத்திரங்கள் பலவகைப்படும்.இங்கே,என்னையும் இணைத்து விமர்சனத்தைத் தொடர்வோம்.

நாம் எக்காரணங்கொண்டும் புலிகளுக்கு முண்டுகொடுத்துப் புரட்சிகரச் சூழலை மறுதலிக்கமுடியாது.

புலிகள் அந்நியச் சேவையில் நமது பல்லாயிரம் போரளிகளைப் பலிகொடுத்தவர்கள்-கொடுப்பவர்கள்.இப்போது, தமது இருப்புக்காக நமது மக்களைப் வன்னிப்பலிப்பீடத்தில் நிறுத்தித் தினமும் சிங்களக் குண்டுகளுக்குப் பலிகொடுத்துப் படங்காட்டுபவர்கள்.

எனவே,புலிகளுக்கு மீளவும் முண்டுகொடுப்பதை நான் ஏற்பதற்கு உடன்பாடானவன் இல்லை.

எதன் பெயராலும் புலித்தலைமையை அதன் போராட்டச் செல்நெறியை,பொருளாதார இலக்கை,வர்க்க நலத்தை ஏற்பதற்கில்லை.நாதன் இங்கே,அடிமட்டப் போராளிகள் குறித்துப் பேசும்போதும் புலிகளது வர்க்க நிலையைச் சரியாக இனங்காணுவதால் அவரது கட்டுரைகளைப் பதிவிடுவதில் ஆர்வமாக இருக்கிறோம்.

எனினும்,தமிழீழம் பத்திரிகையின் தந்திரோபாயமும்,தூண்டிலில் பிரஜைகள் கட்டிய கருத்துக்களுக்கும் பின்னாலிருந்த சக்தி புலிகள் என்பதை நாம் மீளவும் குறித்துக்கொள்வோம்.இங்கே,நாதனை உள்வாங்கும்போது அவரது அரசியலுக்கான நியாயப்பாடுகளைப் புரிந்துவிடப்போகிறோம்.இதற்குக் காலவகாசம் தேவை.அதுவரை அவரது தரப்பு விவாதங்களை உள்வாங்குவோம்.


நட்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
05.04.09



"கொள்ளையில் போவாரே; நாசமாகப்போவாரே;பாடையிலபோவாரே; தாலி அறுப்பான்களே!"

ம்-"கொள்ளையில் போவாரே; நாசமாகப்போவாரே; பாடையிலபோவாரே; தாலி அறுப்பான்களே!"இவ்வாறுதான் மக்கள் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். மக்களின் பிணங்களின் எண்ணிக்கையை வைத்தே அரசியல் செய்யும் போராட்ட அமைப்புத் தான் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடுவதாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் புலம்பெயர் மக்கள். ஆனால் பிணங்களின் அரசியல் பின்னால் உள்ள கபடத்தனத்தை இன்னும் உணராதவராக இருக்கின்றார்கள்.

பணத்தின் அருமை தெரியாதவர்கள், உடலுழைப்பை வழங்காது மற்றவர்கள் உழைப்பில் வாழ்பவர்களின் ஆடம்பரமாக வாழ்ந்தவர்கள். மக்களின் உணர்வு என்றால் என்னவென்று தெரியாத நடைபிணங்களாக போராளிகளின் தலைமை இருக்கின்றது. இவர்களே மக்களின் உரிமையை மறுத்தவர்கள். தமது இருப்பை கேள்விக்குள்ளாக்கும் எந்த எதிர்கருத்துக்களையும் ஏற்க மறுத்தவர்கள் தமது சட்டங்களின் மூலம் மக்களின் வாயை அடைத்தவர்கள்; இந்தப் போராட்டம் என்ன இலக்கிற்காக தொடங்கப்பட்டது என்பதையே அழித்து, குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட அதிகாரவர்க்கத்தின் நலனுக்காக இன்று மக்கள் மடிந்து கொண்டிருக்கின்றார்கள்.


சிறிலங்கா இனவாத பாசீசம் எவ்வாறு மூர்க்கத்தனமாக இருக்கின்றதோ அதற்கும் குறையாமல் தமிழ் குறுந்தேசிய பாசீசம் தமிழ்மக்களையும்;இளம் தேசபக்கதர்களையும் தமது இருப்புக்காக கொல்கின்றனர்.
வன்னியில் சில மைல் நிலப்பரப்பில் வாழும் மக்களின் அவலம் நாளாந்தம் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றது.


ஒவ்வொருநாளும் கடனுக்கு வாங்கிய பொருளுக்கு கடனைக் கட்டுவது போல தவணை முறையில் மக்களின் உயிர்களை நாளாந்தம் சாகடித்துக் கொண்டிருக்கின்றனர் யுத்தவெறி அரக்கர்கள்.


நாம் யாருக்காக போராடுகின்றோம்?


போராடுகின்ற மக்களின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு விடுதலை அமைப்பு புரிந்து கொண்டதாக இல்லை. இன்று சிறிய பகுதியில் இருக்கின்ற மக்களின் ஒரு பகுதியினர் அனுமதிப்பத்திரம் வழங்க மறுத்த காரணத்தினால் யுத்தம் தொடங்க முன்னர் வெறியேற முடியாது பலவந்தமாக புலிகளின் கட்டுப்பாட்டினுள் வாழ வேண்டிய நிலையில் உள்ளவர்களின் நிலையாது புலிகளின் தவறான நடவடிக்கைதான் காரணம். (முன்னர் குறிப்பிட்டது போன்று அரசினால் ஏற்பட்ட வடு, உறவினர்கள், காயப்பட்டவர்கள்,அங்கவீனமான போராளிகள் அடங்கும்).
இவ்வாறு பலசில நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கின்ற போது முழு கடல்பாதையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களை பாதுகாப்பாக தமிழ் நாட்டிற்கு அனுப்பி இருக்கலாம். மற்றைய மக்களை அவர்கள் போக்கிற்கே வாழ அனுமதித்திருக்க முடியும். இவ்வளவு நிலப்பரப்பை வைத்துக் கொண்டவர்கள் இன்று எவ்வித பாரிய எதிர்ப்பும் இன்றி முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு வரை மக்களைக் கொண்டு செல்லும் வரை பாரிய எதிர்ப்பை புலிகள் காட்டவில்லை. மாறாக கிளிநொச்சி போனால் எந்த இழப்பும் இல்லை என அறிக்கை விட்டனர்.

இவர்கள் செய்திருக்க வேண்டியது:

மக்களை அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் செல்ல அனுமதித்திருப்பது.

தமிழ் நாட்டில் குடும்ப உறவுகளை; காயப்பட்டவர்கள்;அங்கவீனமான போராளிகளை கொண்டு சென்றிருக்கலாம்.


மற்றைய போராளிகளும், தலைமையும் தமக்குத் தெரிந்த வகையில் புதிய தளங்களை நோக்கி சென்றிருக்க முடியும். ஏனெனில் ஒரு கெரில்லா அணி என்பது சிறு குழுக்களாக வாழ்ந்திருக்க முடியும்.

இவைகளை இராணுவரீதியாக எவ்வித அனுபவமும் இல்லாம் எம்மால் சிந்திக்க முடிகின்றது என்றால் உலகின் தலைசிறந்த கெரில்லா அணியும் அதன் தலைமையும் இவ்வாறு ஏன் சிந்திக்க முடியவில்லை?

தமிழ் நாட்டில் அங்கவீனமான போராளிகள், நோயாளிகள்;வயதுவந்த தேசபக்தர்கள் வாழ்ந்திருக்க முடியும். ஏன் இப்பவும் முடிகின்றது. ஆக புலிகளின் தலைமையும் அதன் போராளிகளும் தமது அமைப்பு வடிவத்தை மாற்றிப் போராடியிருக்கலாம்.
ஆனால், நடந்தது என்ன எதிர்ப்பைக் காட்டாது முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியைச் சென்றவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பயன்படுத்தாதது விட்ட காரணம் என்ன?


இன்று, அந்த ஆயுதங்கள் பல இராணுவத்தின் கைகளில் பிடிபட்டுள்ளது.



இவைகளை ஏன் பயன்படுத்தவில்லை?


மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லவிட்டு இருக்கின்ற ஆயுதங்கள் முடியும் வரையாவது தமது எதிர்ப்பைக் காட்டியிருக்க முடியும். அவ்வாறு எதிர்தாக்குதலைத் தொடராது சிறிய பிரதேசம் வரை மக்களை கொண்டுவந்துவிட்டு சர்வதேசமே திரும்பிப்பார் என கூக்குரல் இடுவதன் மூலம் எந்த சர்வதேசமும் எம்மை எட்டிப் பார்க்கப்போவதில்லை.

சிறு பிரதேசத்தில் வைத்துக் கொண்டு சர்வசேதம் தலையிடவேண்டும் என கோரிக்கை விடுகின்றீர்கள். சர்வதேசம் எவ்வாறாக பிரச்சனைகளில் தலையிடுகின்றன என்ற பார்வை விடுதலை இயக்கத்திடம் இல்லை என்பதே தற்கால நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன.


*சர்வதேசத்திடம் புலிகளை அங்கீகரிக்கக் கோருவது


*புலிகளே மக்களின் ஏகப்பிரதிநிதி


*எமக்குத் தேவை தமிழீழம்


*தடையை நீக்கு


*தலைவர் பிரபாகரன்

இதில் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் அடக்கியிருக்கின்றனவா?



ஒரு விடுதலைப் போராட்டத்தில் இருக்க வேண்டிய இலக்கு, கோரிக்கைகள் எல்லாம் சாதாரண மக்களிடம் செல்லப்பட வேண்டும். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள சாதாரண மக்களிடம் தமிழ் மக்கள் சார்பான கோரிக்கைகள் சரியான வகையில் சென்றடையவில்லை. அவ்வாறு சென்றடையவேண்டும் என்றால் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைள் அவசியமாகும்.


புலம்பெயர்நாடுகளில் உள்ள அதிகாரவர்க்கத்தின் விசுவாசிகள் தமது தலைமையிடம் நற்பெயர்வாக்குவதற்கா தலைவரின் படத்தையும், புலிக்கொடியையும் ஏந்துகின்ற போராட்ட வடிவமாக உருவாக்கிக் கொள்கின்றனர்.

புலம்பெயர் தமிழ்மக்கள் அரசியல் ரீதியான பார்வை பூச்சியமாக இருக்கின்றதும் அவர்களின் உணர்வுகள் இழப்புக்களினால் ஏற்படும் துயரமும் பிற்போக்கு அரசியலுக்கு இரையாகின்றனர். தமிழ்மக்களிடம் இருக்கின்ற இரக்கமும், தமது உறவுகளின் பாசமும், இழப்புக்கள் மீதான அனுதாபமும் நீண்டகாலப் போக்கில் எவ்வித அரசியல் விழைவையும் ஏற்படுத்தப் போவதில்லை. மக்கள் தமது எதிரியை அறியும் வண்ணமான கோரிக்கைள், போராட்டங்களே தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை வெற்றியடையச் செய்யும்.


இன்று வணக்கா மண் என்ற திட்டத்திற்கு பொருள் கொடுப்பவர்கள் தமது உறவுகளின் மீதா பாசமும், இழப்புக்கள் மீதான அனுதாபமும் இருப்பதானால் தான் அள்ளி அள்ளிக் கொடுக்கின்றார்கள் கொடுப்பார்கள். கொடுப்பவர்கள் இருக்கின்ற வரையில் வருவாயை தம்முள் பகிந்து கொள்வதற்கு ஒரு கூட்டமும் உருவாகிக் கொண்டே இருக்கும். வணங்கா மண்ணுக்கு உதவுபவர்களை சொச்சைப்படுத்த முடியாது. அவர்களின் உணர்வை மதிக்கப்பட வேண்டியதுண்மையே. ஆனால் விலையுயர்ந்த இவ்வாறான போராட்ட வடிவத்தை முன்கொண்டுவந்த மேதாவிகளைத் தான் நாம் விமர்சிக்க வேண்டியிருக்கின்றது. இவர்களின் போராட்ட முறை கூட பலஆயிரம் மக்களுக்கு நிவாரணம் கொடுக்கக் கூடிய தொகையை தின்று விழுங்கி விடுகின்றது.
புலிகளின் விலையுயர்ந்த போராட்டத்தை நடத்தத் தான் தெரியும். ஒன்று மக்களின் உயிர், அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்ட நிலையில் வன்னியின் சிறுநிலப்பரப்பில்...

புலம்பெயர் நாட்டிலோ விலையுயர்ந்த போராட்டவடிவமாகிய வணங்கா மண் நிவாரண உதவிகள் கூடிய கப்பலை அனுப்புகின்றனர். இதுகூட ஒரு வளர்ந்த வர்க்கத்தின் போராட்ட முறையே ஒழிய உழைக்கும் மக்களுக்காக போராட்ட முறையல்ல. யூதர்களிடம் இருந்த நிதி மூலதனத்தின் மூலம் தமது தேசத்தை விலைக்கு வாங்கும் நோக்குடன் சென்ற கப்பல் பயணமேயன்றி மற்றைய இனங்கிடம் நேசக்கரம் நீண்டும் அரசியல் யூதர்களின் பணம்படைத்த வர்க்கத்தவர்களிடம் இருக்கவில்லை.
இன்று சர்வதேசமே எம்மை பார் என்று அழுது புலம்புகின்றோம். ஆனால் அவர்கள் எவரும் எம்மை நோக்கி வரப்போவதில்லை. இன்று இழக்கப்படுகின்ற வளங்களை (மனித வளம், சொத்துக்கள்) பாதுகாத்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்க முடியும். ஆனால் அவைகளை அழித்துக் கொண்டு இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளதாக பிரச்சாரம் செய்கின்றனர். பிரச்சனையை திடீரென முத்திவிட்டதாக காட்டுகின்றனர். பழத்தினை புகைப்போட்டு பழுக்க வைக்க முடியும் ஆனால் ஒரு போராட்டத்தை வலுக்கட்டாயமாக உக்கிரமடைந்ததாக உருவாக்க முடியாது.


கிழக்கைரோப்பிய நாடுகளில் மேற்கு தேசங்கள் தாம் கொண்ட திட்டத்தை நிகழ்த்துவதற்காக பல சதித்திட்டங்களை நடத்தி முடித்தனர். அங்கு மேற்குல நிகழ்ச்சி நிரல் தயாராக இருந்தது. அதன் பொருட்டான செயற்பாடுகள் நடைபெற்றன. உதாரணமாக வைத்தியசாலையில் கொலை நடைபெற்றதாக பிரச்சாரம் செய்தனர். கிராம மக்களை கொலை செய்து அவர்களை யூக்கோஸ்லாவிய அரசு நடத்தியதாக செய்திகளை ஊடகவியலாளர்கள் நடத்திக் காட்டினர்.

ஈராக்கில் அழிவை ஏற்படுத்தக் கூடியதாக ஆயுதங்கள் இருந்தாக பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகள் மேற்கு தேசங்களின் குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்பு நிகழ்ச்சிரநிரலுக்கு அமைய இடம்பெற்றது.
இலங்கை தேசத்தைப் பொறுத்தவரை இந்திய உபகண்டத்தின் சந்தையை பலத்தை கொண்டே அமெரிக்க, ஐரோப்பிய நலன்கள் இருக்கின்றது. இங்கு அமெரிக்காவின் அனுசரணை இந்திய தலைமையில் அடிப்படையில் அமைந்ததாகவே இருக்கும். இங்கு அமெரிக்க - இந்திய கூட்டு செயற்பாடு இருப்பதை அவதானிப்பதாக விடுதலைப் புலிகள் இல்லை. இந்திய ஆட்சியாளர்கள் அழுத்தம் திருத்தமாக பின்வருமாறு தெரிவிக்கின்றனர்.

"இலங்கையின் வடக்கு பகுதியில் அனைத்தும் முழுமையாக அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு,அந்த பகுதி மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கும் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதும் தேவையாகும்." - சிவசங்கர் மேனன்-குறிப்பிட்டதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.


சர்வதேச நாடுகள் புலிகள் தளத்தை வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. இவ்வாறு இருக்கையில் ஒரு விடுதலை அமைப்பு என்ன விதமான மாற்றுக் பாதையை தெரிவு செய்திருக்க வேண்டும்?


முதலில் மக்களை பாதுகாப்பில் வைத்திருக்கும்படியான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும். பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலம் அன்னியர்கள் தலையீட்டை தவிர்த்திருக்க முடியும்.


மக்களின் அழிவை தடுப்பதன் மூலம் போராட்டத்தின்பால் போராடி வாழும் மக்களுக்கு விரக்தியை ஏற்படுவதை தவிர்த்திருக்க முடியும். பலமுறை இடம்பெயர்ந்த மக்கள், உங்களை பாதுகாத்த மக்கள் இவர்களை இன்று ஒரு சிறுபகுதியில் கொண்டு சென்று கொல்லக் கொடுப்பதை போராட்டத்தின் நடுவே வாழும் மக்கள் ஏதிர்வினை ஆற்றத்தான் போகின்றார்கள். புலம்பெயர் மக்கள் நேரிடையாக இழப்பை சந்திக்காதவர்கள். ஆனால் போராடி வாழும் மக்கள் இந்த அழிவு நீங்காத வடுவை ஏற்படுத்தும், இது எந்த வித போராட்டத்திற்கும் தயாரற்ர மக்களைத் தான் நாம் உருவாக்கப் போகின்றோம்.


ஆனால் புலம்பெயர் மக்கள் தமிழ் மக்களின் உரிமைக்காக புலம்பெயர் நாடுகளில் இருந்து போராடுவதாக கூறுவது கூட ஒரு எல்லைக்குள் உட்பட்டதுதான். இவர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் நிலைக்கு ஏற்ப வாழப்பழகிக் கொண்டவர்கள். இன்று இவர்களிடம் இருப்பது இரக்க உணர்வு. இவைகள் ஒரு இழவு நடந்த குறிப்பிட்ட காலத்தின் பின்னராக நடந்த சம்பவத்தை மறக்கும் நிலைக்கு ஒப்பாகவே மறந்து விடுவர். புலம்பெயர் மக்கள் நாட்டில் வாழும் மக்களை விட வர்க்க ரீதியாக மாறுபட்டவர்கள். இவர்களின் தேவை என்பது போராடி வாழும் மக்களின் தேவைக்கும் இடையே நிறைவே மாறுபாடு இருக்கின்றது. அன்பார்ந்த தேசபக்தர்களே!,
தமிழ் மக்களின் உரிமைப் போர் என்பது ஒரு அதிகார வர்க்கத்தைப் பாதுகாப்பதல்ல. மக்களைப் பாதுகாப்பதே. நீங்கள் அந்த மக்களை விடுதலை செய்யும் போராட்டத்தை தொடருங்கள். இதன் மூலம் இளம் தேசபக்தர்களின் தலைமையில் புதிய விடுதலைப் போர் தொடரட்டும். ஆம் நீங்கள் செய்ய வேண்டியது மக்களை அரச பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப் போராடுவதும், பின்னர் நீங்கள் புதிய தளங்களை நோக்கி நகர்ந்து நிலமைக்குத் தகுந்தது போல புதிய போராட்ட யுக்தியைப் பயன்படுத்துங்கள். நாம் மக்களையும் உங்களைப் போல உள்ள தேசபக்தர்களின் அழிவை இனவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்தவர்கள் போல நாம் ஆதரிக்கவில்லை.

இனவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து எதிரி யார் எனத் தெரியாமல் தனது சொந்தச் சகோதரர்கள் சாகக் கண்டும் காணாமல் இருக்கின்றனர். இவர்களைப் போல எந்த மனிதர்களும் இருக்க முடியாது. இன்று தளத்தில் அழிவது இளம் தேசபக்தர்களும், மக்களுமாவர். நாம் ஒரு இனத்தின் அழிவை சிறு தொகுதி கொண்ட அதிகார வர்க்கத்திற்காக பழிவாங்க முடியாது. இறப்பவர்கள் எமது இரத்தங்கள். அன்பார்ந்த இளம் தேசபக்கதர்களே மக்களை விடுவிக்கப்பப் போராடுங்கள். அத்துடன் எம் மக்களை கொல்லும் பாதகர்களை வேறு வடிவில் போராட்டத்தை அமைத்துக் கொள்வதன் மூலம் எதிர் கொள்ளுங்கள்.

-நாதன்.